“காளை மாட்டிற்கு தானியம் வைத்து பசு மாட்டிடம் பால் கேட்டு அறிக்கை விடலாமா…?”- நடேசன்
Posted on December 29th, 2014

– நடேசன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மிகவும் கவனமாக சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்களது வாக்குகள் சமூகத்தின் – நாட்டின் எதிர்காலத்தை திர்மானிப்பது மட்டுமல்ல தனிமனிதர்களின் எதிர்காலத்தையும் வரையறுப்பது. இலங்கைவாழ் தமிழர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு இது தருணமல்ல என்றாலும்; கடந்தகாலத்தை இலகுவில் கடந்து போக முடியாது. மறந்துவிடவும் முடியாது.

77இல் கொழும்புத் தமிழர்கள் மலையகத்தமிழர்கள் நூறு வீதமாக ஐக்கிய தேசியகட்சிக்கு வாக்களித்தார்கள் அதேவேளையில் வடகிழக்கில் தமிழர்கள் ஈழக்கோரிக்கையை ஆதரித்து பிரிவினை கேட்ட கட்சிக்கு வாக்களித்தார்கள். இதனால் நடந்த அனர்த்தங்களுக்கு கட்சி மற்றும் இயக்கத் தலைமைகள் மட்டுமல்ல சாதாரண வாக்காளர்களும் பொறுப்பாளியாகிறார்கள்.

வடக்கில் தனி ஈழம் கோரியதால் ஐக்கியதேசியக்கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்மீது ஐக்கியதேசியக்கட்சி அரசே 77 இல் வன்முறையை உடனடியாக அவிட்டு விட்டது. அக்காலத்தில் எந்தவொரு ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களும் இல்லை.

77இல் தமக்கு கிடைத்த வட- கிழக்கின் வாக்குகள் பிரிவினைக்கு அளிக்கப்பட்ட வாக்குகளாக கருதி தமிழ்த்தலைவர்களும் விடுதலை இயக்கங்களும் 30 வருடங்களாக ஒரு புள்ளடியை காரணம் காட்டி நரகத்தை நோக்கி தமிழ் மக்களை அழ அழ தரதரவென இழுத்துசென்றார்கள்.

இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல எந்த நாட்டிலும் தேசப்பிரிவினையை எதிர்த்து எந்தவொரு அரசாங்கமும் யுத்தம் நடத்தியிருக்கும். சண்டையை ஆரம்பித்துவிட்டு பலமாக அடித்துவிட்டான் என சிறுவர் பாடசாலைகளில் அழும் சிறுவர்கள்போல் புலம்பமுடியாது. பிரிவினைக்காக ஆயுதம் தூக்கியபோதே முள்ளிவாய்க்கால் அவலம் போன்ற சம்பவத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். அதற்கு உலக வரலாற்றில் பல சம்பவங்கள் உதாரணமாக உள்ளன.

இந்த முறை இலங்கை ஜனாதிபதி இரண்டுவருடங்கள் தனது பதவிக்காலம் நீடிப்பதை மறுத்து தேர்தலை நடத்துகிறார். அரசியல்வாதிகள் எந்தக்காலத்திலாவது தனது பதவிகாலத்தை சுருக்குவதற்கு சிந்திப்பார்களா…? சாதாரணமாக நாங்கள் அவரது இடத்தில் இருந்திருந்தால் நாம் இதைச் செய்வோமா…?

தன்மீதான அதிருப்தி மக்களிடம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளுவதற்கான சகல வசதிகளையும் கொண்டவர் அவர். இலங்கையில் தற்காலத்தில் புலனாய்வுப்பிரிவு முன்பிலும் பார்க்க சிறப்பாக இயங்குகிறது. அதனையும்விட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளைகள் ஏனைய எந்தக் கட்சிகளையும் விட தென்னிலங்கையில் பரந்துபட்டு உள்ளது. அவற்றின் கடிவாளத்தை வைத்திருப்பவர் அமைச்சர் பசில் இராஜபக்ஷ. இவர்களால் நாட்டு மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும்

தற்போதைய அரசாங்கத்திலும் பார்க்க எதிரணியில் இருப்பவர்கள் ஜனநாயகவாதிகள் – சிறுபான்மையினர்மீது அக்கறை கொண்டவர்கள் என்பதற்கு ஏதும் உத்தரவாதம் இருக்கிறதா…?
மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிடுபவர்கள் தமிழர்களுக்குரிய எதிர்காலத்தை தற்போதைய நிலையிலும் பார்க்க உயர்த்துவதற்கான கொள்கையை கொண்டவர்களா…? கடந்த காலத்தில் இந்த எதிரணிக்கூட்டு முன்னணியில் அங்கம் வகிப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் நடந்து கொண்டமுறைகள் எப்படி இருந்தன…?

இந்த இரண்டு கேள்விகளும் அதிகம் சிக்கலானவையல்ல. மூளையை குடைந்து பதில் தேடவேண்டியவை அல்ல எந்த மூடர்களுக்கும் புரியும்.

இதற்கும் அப்பால் முழு இலங்கையின் விடயத்தை 74 வீதமான சிங்கள மக்களே தீர்மானிப்பார்கள் என்பது நமக்குத் தெரிந்த விடயம். கடந்த காலங்களில் அவர்களது செய்கைகளைப் பார்த்தால் பெரும்பாலான காலங்களில் அந்த அந்தக் காலத்திற்குப் பொருத்தமானவர்களையே அவர்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்.

நான் அறிந்தவரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசு எழுபதுகளில் உணவுப்பஞ்சத்தை மக்கள் மீது திணித்தமையினால் 77 இல் நாடு தழுவியரீதியில் மக்கள் மிகப் பெரும்பான்மையாக ஐக்கிய தேசியகட்சிக்கு வாக்களித்தார்கள்.

அதன் பலனை தமிழர்கள் 77 – 81 – 83 இல் அனுபவித்தார்கள். இக்காலப்பகுதியில் இலங்கை மக்கள் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் மற்றும் ஜே. வி. பி முதலானவற்றின் ஆயுதமுனைத்தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்தார்கள்.
இக்காலங்களில் பெருந்தொகையான சிங்கள மக்களும் கொல்லப்பட்டார்கள். 89 இல் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டார்கள்.
அதன்பின்பு சமாதானத்தை நாடிய மக்கள் நாடுதழுவிய ரீதியில் சந்திரிகாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தார்கள். இவ்வாறு இரண்டு பிரதான கட்சிகளும் நாடுதழுவிய ரீதியில் மக்கள் ஆதரவு பெற்று பின்னர் மக்களாலேயே நாடு தழுவிய ரீதியில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் தூக்கிவீசப்பட்டன.

இவற்றிலிருந்து நமக்குக்குக்கிடைக்கும் செய்தி தெளிவானது. பெரும்பான்மையின சிங்கள மக்கள் மிகவும் அவதானிப்புடனேயே அரசுகளை மாற்றுகிறார்கள். சிறிய அற்ப விடயங்களை அவர்கள் கவனத்தில் எடுப்பதில்லை. ஆனால் தமது அன்றாட வாழ்விற்கு எது மிக முக்கியமானதோ அதனைவைத்தே தீர்மானங்களுக்கு வருகிறார்கள்.

இப்படியாக சிங்கள மக்கள் செயற்படுவதன் காரணம் – அவர்கள் கிராமங்களில் பெரும்பான்மையாக வசிப்பதனால் மட்டுமல்ல அங்கு தங்களைப் பாதிக்கும் செயல்களை மிகவும் எளிதாக தெரிந்தால் மட்டுமே தீர்மானங்களுக்கு வருகிறார்கள்.

இதை விட மகிந்த ராஜபக்ஷ முதல் முறை பதவிக்கு வந்தபோது சாதாரணமக்கள் இரண்டாக பிரிந்தார்கள். எனினும் அவர்களுக்கு இடையே பெரிய வேறுபாடு இருக்கவில்லை. ஆனால் அதற்கு அக்காலத்தில் விடுதலைப்புலிகள் உதவினார்கள்.அடுத்தமுறை அவர்கள – போரை முடிவுக்கு கொண்டுவந்ததால் அதற்கு நன்றிக்கடனாக மகிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்தார்கள்.

இம்முறை தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் அலையுள்ளதா…? என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது. மேலும் போரில் வென்றதுடன் நில்லாமல் தற்போதை அரசாங்கத்தில் இலங்கையில் எந்தக்காலத்திலும் நடக்காத நிர்மாணப்பணிகள் நடந்துள்ளதை அரசாங்கத்தை எதிர்ப்பவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.

போக்குவரத்து துறையில் நடந்த கட்டுமானப் பணிகள் சாதாரண விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நேரடியாகவே வருமானத்தை அளிக்கிறது.
உலகெங்கும் பணநெருக்கடியான காலத்தில் இலங்கையில் போர் முடிந்தது. மேற்கு நாடுகள் எல்லாம் தங்கள் மக்களை எப்படிப் பார்த்துக்கொள்ளலாம் என திணறிய காலத்தில் இலங்கையில் சீனாவின் உதவியுடன் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடந்தன.

சாதாரண விவசாயிகளுக்கு உரமானியம் – மீனவர்களுக்கு எரிபொருள் மனியம் – என பெரும்பான்மை சிங்கள மக்களை பட்டினியில் இருந்து பாதுகாக்கும்.
சிங்கள மக்கள் நன்றியுணர்வும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் கொண்டவர்கள். வெளிநாடுகளின் தலையீட்டையும் எதிர்த்து தலையீட்டை ஆதரிப்பவர்களுக்கும் எதிரானவர்கள்.

இந்த நிலையில் உணர்வு ரீதியாக வாக்களித்து வேலிக்கு வெளியால் நிற்கப் போகின்றோமா…? அறிவு ரீதியாக சிந்தித்து வாக்களிப்பது இலங்கையில் வாக்குரிமைகொண்ட தமிழர்கள் தீர்மானிக்கவேண்டியது.

கடந்த தடவை தமிழ்த்தரப்பு காளை மாட்டிற்கு தானியத்தை வைத்துவிட்டு பசுமாட்டிடம் பால்கேட்டு அறிக்கைவிட்டது ஆனால் இம்முறையும் அதையே தமிழ்த்; தலைவர்கள் தரப்பு செய்தாலும் தமிழ் மக்கள் அதனைச் செய்யக்கூடாது என்பதுதான் எனது ஆவல்.

2 Responses to ““காளை மாட்டிற்கு தானியம் வைத்து பசு மாட்டிடம் பால் கேட்டு அறிக்கை விடலாமா…?”- நடேசன்”

  1. Wickrama Says:

    A translation, please, somebody !

  2. SA Kumar Says:

    Wickrama , not worth to translate even head line not make any sence. He is vet doctor so he talking about cow.

Leave a Reply

You must be logged in to post a comment.

 

 


Copyright © 2022 LankaWeb.com. All Rights Reserved. Powered by Wordpress